Wednesday, August 11, 2010

பிரபாவுக்கும் அரசுக்கும் நாம் ஆதரவு என்ற புரளியில் உண்மையில்லை.


ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரிடமிருந்து…
ஊடகங்களுக்கு  MEDIA RELEASE
(ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்கள், பிரபாவுக்கும், அரசுக்கும் ஆதரவு என்ற புரளி சில இணையத்தளங்கள் ஊடாக வெளிவந்திருக்கின்ற காரணத்தினால் எமது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.)

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசனின் பதிவி நீக்கம் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் உருவெடுத்துள்ளது.
ஜ.ம.மு.வின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் பதவி என பிரபா கணேசன் வகித்த பதவிகளுக்கு முறையே ஜ.ம.மு மாகாணசபை உறுப்பினர்களான ராஜேந்திரனும், முரளி ரகுநாதனும் நியமிக்க அரசியல் குழு முடிவெடுத்திருந்து. ஆனால் ஏற்கனவே கட்சியின் தலைவர் மனோ கணேசன், பிரபா கணேசனுக்கு 14 நாள் அவகாசம் வழங்கும் முடிவை எடுத்திருந்தார், இதை அரசியல் குழுவும் அங்கீகரித்திருந்தது, இந்த அவகாசம் தொடர்பிலான அறிவித்தலில் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் நான் கையொப்பமிட்டேன், ஆகவே அந்த 14 நாள் அவகாசம் முடியும் வரை புதிய நியமனங்களை மேற்கொள்ளுதல் சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கலாம் என்பதனால் திரு.ராஜேந்திரன் மற்றும் திரு.முரளி ரகுநாதன் ஆகிய இருவரும் 14 நாள் காலக்கெடுவுக்குப் பின்னரே பதவியேற்க முடிவெடுத்திருப்பதாக எனக்கு அறிவித்தார்கள், ஆகவே அந்த 14 கால அவகாசம் முடிந்த பின்னரே புதியவர்கள் பதவியேற்க நான் ஒப்புதல் அளித்திருந்தேன்.
பிரபா கணேசன் தற்போது கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் 14 நாட்களுக்குள் எதிர்த்தரப்பிற்குத் திரும்ப வேண்டும் எனவும், அதேவேளை அரசு 3ல்2 பெரும்பான்மை பெறும்பொருட்டு அரசுக்குச் சார்பாக வாக்களிக்கக்கூடாது எனவும் கட்சி அறிவுறுத்தியிருக்கிறது. பிரபா இந்த அவகாசத்துள் எதிர்க்கட்சிக்குத் திரும்பாத பட்சத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்பது அரசியல் குழுவின் தீர்மானமாகும். இதுவரை இது தொடர்பில் உத்தியோகபூர்வப் பதில் எதனையும் அவர் கட்சிக்கு அனுப்பிவைக்கவில்லை.

இந்நிலையில் இந்நடவடிக்கை தொடர்பாக எமது மாகாணசபை உறுப்பினர்கள் பிரபா கணேசனுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. இவற்றில் துளியேனும் உண்மையில்லை. நாங்கள் பிரபா கணேசனின் அரசுடன் இணைந்த செயற்பாட்டை முழுமையாக எதிர்க்கிறோம். இதில் துளியேனும் சமரசத்திற்கு இடம் இல்லை. அவருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு சட்டரீதியானது, அது வழங்கப்பட்டே ஆக வேண்டும், அதனை மீறி நாம் செயற்பட்டால் சட்டரீதியான சிக்கல்கள் உருவாகலாம் ஏனெனில் இடைநிறுத்தம் என்பது நீக்கமல்ல, நீக்கப்படுவதற்கு முன்னர் அவரது விளக்கத்தை வழங்க கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம், அதனாலேதான், திரு ராஜேந்திரனும், திரு.முரளி ரகுநாதனும் 14 நாட்கள் அவகாசத்தின் பின்னர் புதிய பதிவிகள் ஏற்ப்போம் என அறிவித்தனர், இதை எவ்வகையிலும் பிரபா கணேசனுக்கும், அரசுக்கும் ஆதரவான நடவடிக்கையாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

எனவே நாம் மூவரும் பிரபா கணேசனை ஆதரிப்பதாக வெளிவரும் புரளியில் எதுவித உண்மையும் இல்லை. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அரசுடன் இணையவேண்டிய எந்தத் தேவையுமில்லை. இன்று, நேற்று அரசியலுக்கு பதவிகளுக்காக நான் வந்தவனில்லை. எனது 29 வருட கால அரசியல் வாழ்வில் 2 தசாப்தங்களுக்கு மேலாக எந்தப் பதவியும் இல்லாமல் அரசியலிலிருந்தவன். ஆகவே இது போன்ற மக்கள் ஆணைக்கு, மக்கள் விருப்புக்கு எதிரான செயற்பாட்டில் நான் ஒரு போதும் ஈடுபட மாட்டேன் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள், அப்படி ஈடுபடும் கட்சியிலும் நான் இருக்க மாட்டேன். ஆகவே ஜனநாயக மக்கள் முன்னணி இன்னும் தமிழர்களுடன் தான் இருக்கிறது, இனியும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். அப்படி எந்நிலையிலாவது ஜ.ம.மு தமிழ் மக்களின் விருப்புக்கும், ஆணைக்கும், அபிலாஷைகளுக்கும் மாறாக நடக்குமாயின், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

பொதுச்செயலாளர்
கலாநிதி.குமரகுருபரன்


span.fullpost {display:inline;}

No comments: